28 நவம்பர் 2012

தேடுதல்


இருந்தும் இல்லாததாய்
ஒரு மாற்றம் 
நீ என்னை 
கடக்கும் பொழுதில்.

அடிக்கடி யாரையோ தேடுவதாய்
பாவனை கொள்கையில் 
நீ 
என்னைத்தான் தேடுகிறாய் 
என்று நானும் பாவனித்து
வருகையில்,
கோபத்திற்கான பாவனையும் 
விலகி போகையில்,
தேடுதலின் பாவனையும் 
தெரிந்தும் தெரியாதுபோல் 
நடநிக்கின்றன 
உன் புருவக்கண்கள்.


காதல்

உனக்கான அடையாளங்களை 
எனக்காக நீயும் 
எனக்கான அடையாளங்களை 
உனக்காக நானும் 
விட்டுக்கொடுத்தலில் வளர்கிறது 
உனக்கும் எனக்கும் இடையேயான 
காதல் .




28 ஆகஸ்ட் 2012

சேலையூர்



விடிந்தால் அலுவலும் பொழுது முடிந்தால் வீடுமாய் இப்படியே பிரயாணிதுப்போன என் மனம் மாறுதலை
தேடியது .

சேலையூர் ,சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள நகரத்தின் வளர்ச்சியால் சுருங்கி வரும் கிராமம் என்றே சொல்லலாம் என் இளமை காலத்தின்  சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த ஊரில்தான் கரைந்து போயின .இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதிற்கிணங்க வீதிதோறும் கோவில்களின் ஆக்கிரமிப்பில்தான் இவ்வூர் காட்சியளிக்கும்.

 நூல் பிடித்து நடுவதைப்போல் வீற்றிருக்கும் கோவில்களின் வீதிதோறும் பக்தி மணம் கமிழும்.அபிராமி,வேம்புலி அம்மன்,பெருமாள்,விநாயகர் என்று ஒன்றன் பின் ஒன்றாக அருள்பாலித்து கொண்டிருக்கும் வீதியில்தான் நானும் இருந்து வருகிறேன்.வீதியை விட்டு வெளியேறினால் நகரத்தின் தோற்றத்தையும் 
வீதியின் வழியே உள்சென்றல் கிராமத்தின் கட்டமைப்பையும் உணரலாம்.

வேம்புலி அம்மன் 
அபிராமி அம்மன் 
பெருமாள் கோவில் 
அமைதியான சூழல்,கிராமத்திற்கான அடையாளங்களை பிரதிபலிக்கும் கிணறுகளும்,குடிநீர்க்காக பயன்படுத்தும் அடிக்குழாயும் பெரும்பாலான வீடுகளில் காணலாம்.எந்த மின்சக்தியுமின்றி மனிதனின் சக்தியால் நீர் இறைக்கும் அடிக்குழாய் பம்புகள்என்றும் வற்றாத அருவி என்றே சொல்லலாம்.நான் தங்கி இருக்கும் வீட்டில் இருமாதத்துக்கு ஒரு முறை பழுதுபோகும் நவீன நீர் இறைப்பான்களை ஈடு செய்யும் பொருட்டு கிணறுகளும்,அடிக்குழாயும்தான் நான் தேடிச்செல்லும் குற்றாலமும்,கொடைக்கானளுமை இருந்து வருகின்றன.நான்கு சுவற்றுக்குள்ளே நனைந்துபோன என் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஒரு மாறுதலை உண்டாக்கியது.








அடிக்குழாய்

திருப்பூர் குமரன் பெயரில் அமைந்திருக்கும் பூங்கா பொழுதுபோக்கின் அடையாளம்.நான் இவ்வூரில் வந்து தங்கிய ஆரம்ப கட்டத்தில் வாரத்தின் இறுதி நாட்களின் மாலை வேளையில் இங்கு என் நண்பர்களுடன் போவது வழக்கம்.குழந்தை முதல் குமரி பருவம் கடந்து குன்றிய பெரியவர்கள் வரை இங்கு களைப்பாற வருவதுண்டு.அவ்வப்போது என் வயது ஓத்த மங்கைகளையும் காணலாம்.ஆங்காங்கே இருக்கும் அமர்க்கையில் அமர்ந்துகொண்டு ஓரப்பார்வைகளை வீசிக்கொண்டிருப்போம்.பதிலுக்கு அவர்களும் வீசிச்செல்வார்கள்.இப்படியே மகிழ்ச்சியில் உறைந்து போனது மனம்.



பூங்காவின்  முகப்புத்தோற்றம் 





நண்பர்கள் ஒவ்வொருவராய் அவரவர் வேலை நிமித்தம் காரணமாய் இடம் பெயர்ந்து போக.மனம் தனிமைக்குள் தள்ளப்பட்டது.
என் போன்ற ஒத்த ரசனைமிக்க ஒருவரும் இல்லை என்ற தவிப்பு.நானும் அறைக்குள்ளே சுருட்டிய பாய்ப்போல கிடக்கப்பெற்றேன்.நாட்கள் கிழிந்தன.அவ்வப்போது பாடல்களும் ,புத்தகங்களும்தான் என் தனிமையை நிவர்த்தி செய்துகொண்டிருந்தன.எத்தனை நாளைக்குதான்
இதே வாழ்வு என  மாற்றம் வேண்டியது என் உள் மனது.






மாற்றம் தேடி சிறு தூர பயணம் மேற்கொள்ள நினைத்தேன்.எவ்விடம் செல்வது ?முதலில் சென்னைய சுற்றியுள்ள ஏதேனும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை இணையத்தில் உலாவியபோது ஒரு இடம் கூட அப்படி சொல்லப்படவில்லை.பிறகு ஒரு நாள் வாரத்தின் இறுதி நாளில் என் கால்கள் மனதிற்கு அறிவிப்பு ஏதும் கொடுக்காமல் தானே நடைப்போட கிளம்பியது அந்த மாலை வேளையில்.ஊரைக்கடந்து ஊர்ந்தன  கால்கள்.கொஞ்சம் கொஞ்சமாய் நகரத்தின் சலனம் குறைய கிராமத்தின் சங்கீதம் ஊடுரவ ஒட்டிக்கொண்டது ஒரு ஒற்றையடி பாதை கால்களில்.


ஒற்றையடிப்பாதை 



தண்ணீரில் மிதக்கும் பந்தினைப்போல்  என் ஊரின் நினைவுகளில் மூழ்கி மூழ்கி எழுந்தது மனம்.ஆம் அந்த இடங்களும் என் ஊரின் பாதியளவை பிரதிப்பலிததுக்கொன்டிருந்தது.ஏரியும்,பனை மரங்களும்,மீன் கொத்தி பறவைகளும் அந்த பிரதிபலிப்பில் ஒப்பனை செய்துகொண்டிருந்தன.குளியலின் போது மஞ்சளை  கல்லில் உரசி அப்பிக்கொண்ட மடந்தையின் கன்னங்களைப்போல் பழுத்துக்கொண்டிருந்த அந்தியில் ,பருவத்தின் அடையாளமாய் தோன்றும் பருக்களைப்போல் விண்மீன்கள் முளைத்துக்கொண்டிருந்தது.









மறுபுறம் கட்சி மாநாடு நடத்திக்கொண்டிருந்தன வெள்ளை நிற கொக்குகளும்,கருப்புத்துண்டை போட்டுக்கொண்டு காடைகளும்.விதைத்தால் போதும் சம்பா பருவத்தை முடித்துவிடலாம் என்றிருக்கும் உழையில் மேய்ந்த களைப்பில் இளைப்பாறின எருமைகள் அதற்கே உரித்தான நடையில்.இவை ஒருபுறம் இருக்க காணாத பச்சையை கண்டதைப்போல் கரண்டிக்கொண்டிருந்தன கறவை மாடுகள் அந்த காய்ந்த நிலத்தில் பரவிக்கடந்த புற்களை.






பகலுக்கு கண்கள் சொப்பனிக்க இரவு மெல்ல போர்த்தியது,ஏரியின் எல்லை வரை போ என்று அடித்து விரட்டியது மனம்.கால்கள் ஓடின.ஏரியின் எல்லை கண்ணுக்கு புலப்பட சற்று கால்களை சரித்து அமர்ந்தேன் கரையின் ஓரத்தில் கதை பேசிக்கொண்டிருந்த வேம்பு மரத்தடியில்.கிளையின் ஊடே ஒளிந்து கொண்டு விளையாடின தூரத்து விண்மீன்கள்.தூரத்தில் பார்வையை வீசினேன் ஏரியின் காய்ந்த இடங்களில் ஆங்காங்கே குழு அமைத்து சிறியவர்களும்,பெரியவர்களுமாய் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

ஏரியின் கரை 







பாசனத்திற்காக கட்டமைத்த அந்த ஏரியின் மதகின் அருகில் பளிச்சென்று சட்டை அணிந்த ஒருவர் ஏரியில் தூண்டிலை வீசிக்கொண்டிருந்தார் சற்றே மனதையும்,சரிந்து கிடந்த கால்களையும் எழுப்பி அவரை நோக்கி நடையுற்றேன்.அவரின் அருகில் நகர்ந்து செல்லும்  அப்பாதை சற்றே சரிவுற்று கிடந்தது அருகில் காட்டாமணக்கு செடிகள் வழிமறித்தன.செடிகளை விலக்கி கொண்டு அவரை சென்றடைந்தேன்.போனதும் அவரை வினவினேன் என்ன வகை மீன் மாட்டுது? பதிலுக்கு மௌனித்தார்.அவரின் முகபாவங்கள் வட இந்தியரைப்போல தோன்ற தமிழ் தெரியாதுஎன்று அடுத்த வினாவினை தொடுக்கவில்லை. அருகில் இருந்த கட்டையில் குந்தினேன்.ஏற்கனவே பிடித்து வைத்திருக்கும் மீன்கள் அந்த நரம்பு பைக்குள் துடித்தன.அவர் ஒன்றுக்கு இரண்டு தூண்டிலை போட்டுக்கொண்டிருந்தார்.நான் சென்ற ஓரிரு நிமிடத்தில் தூண்டிலில் இருக்கும் மண்புழுவை கடிக்க ,தூண்டில் சினிங்கியத்தை கண்டு வெடுக்கென்று தூண்டிலை தூக்கினார்.மீன் துடித்துக்கொண்டு அந்த தூண்டில் முள்ளில் வெளியே வந்தது.மீனின் துடிப்பில் தெறித்த ஏரியின் நீர்த்துளியில் மீன்களின் கவிச்சியும்,உழையின் வாசமும் என் மேல் விழுந்தது.


பாசனத்திற்கான மதகு 




  
சம்புக்காடுகள் 



   




























அவர் மீனை தூண்டில் முள்ளில் இருந்து எடுத்து பைக்குள் போட்டார்.சிலேப்பி மீன் பெரும்பாலும் ஏரிகளிலும்,குட்டைகளிலும் கிடைக்கும் மீன்தான் அவருக்கும் அந்த ஏரியில் கிடைத்தது.அகன்ற தட்டையான உடல் பரப்பும்,அதிக முட்களும் இருக்கும் சிலேப்பி கெண்டை மீனைக்காட்டிலும் சுவை மிகுந்தது.இரவு விரிந்து கொண்டிருக்க மனதின் ஓட்டத்தை நிறுத்தி வீடு திரும்ப எழுந்து நடந்தேன்.


மூன்று பேர் ஏரியின் பக்கத்தில் பரவிக்கிடந்த சம்புக்காடுகளில் இருந்து வெளியே வந்தனர்,ஒருவர் மீன் பிடிக்க வலையினையும்,மற்றொருவர் வெள்ளை சாக்கினையும் சுருட்டி வைத்திருந்தனர்.கால்களுக்கு விசை கூட்டி நடந்தேன்.கரையில் இருந்து இறங்கி வயலில் நடக்க ஆரம்பித்தேன் செல்லும் வழியில் கிணறுகளும்,பழுதடைந்த மோட்டார்களும் கிடந்தன.சற்றே தலை குனிந்து கிணற்றினை எட்டிப்பார்க்கையில் நிலாப்பெண்  அந்த கிணற்றில்
இரவு வேலைக்காக நீராடிக்கொண்டிருந்தால்.அருகில் உயர்ந்த இரு கருப்பு காதலர்கள் கதைத்துகொண்டிருந்தனர்.மனதினை அழைத்துக்கொண்டு
வேக நடைப்போட்டேன்.








கருப்பு காதலர்கள் 


கிராமம் உறங்க ஆரம்பித்தது ,நகரம் ஒலிக்கத்தொடங்கியது வாகனங்களின் சத்தத்தால்.

01 அக்டோபர் 2011

காதலின் கடைசி கூற்றாய்...

காதலர்களுக்கு சில கணைகள்
காதல் என்றால் என்ன ?
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலின்
புதுயுலகமாம் ...
ஏற்றுகொள்ள இயலவில்லை
என்னைப்பொருத்தமட்டில்
காதல் காமத்தின் காவியுடை ..
ஆம்
காமம் ஒன்று இல்லையேல் இங்கு
காதலும் இல்லை ..
காவியும்  இல்லை ..


கடவுள் முதல் கல்லறைப்பூக்கள் வரை
காதலை காமமாய் காட்சி ஏற்றும் ..
ஆம்
மகரந்ததிற்கு  தன் மடிவிரித்திரிக்கும் மலர்கள்
ஏன்? மொட்டுக்களாவே
மூடியிருக்கலாமே....
ஏன் ?
ஆடை அவிழ்த்து
அழகூட்ட  வேண்டும்...


ப(ம )றந்து வரும் மன்மத தேனீக்கள்
அங்கே ..
முதலில் பூக்களை புரிந்துகொள்ள வருவதில்லையே
புணர்ந்து ,காமத்தேனை கறந்து செல்கிறது ..
காதலின்
கடைசி கூற்றாய்..
புரிதல் மட்டுமல்ல காதல்
புனர்வதற்காக வெளிப்படுத்தும்
புனித புரிதல் செயல்தான் ..
காதல் .

12 செப்டம்பர் 2011

கடவுளும் கவிஞன்தான்

என்னுயிர் படைத்த பிரம்மன்
உன்னுயிர் படைத்தல் நேரம்
உன்னுடன் காதல் கொண்டானோ
பெண்ணுயிராய் படைக்கவேண்டிய உன்னை
என்னுயிர் எடுக்கும் எமனாக்கிவிட்டான்
ஆம்
 உலகின்  கவிதைகளை எல்லாம்
தொகுத்து
ஒட்டுமொத்த உயிர் புத்தகமாய்
உன்னில் எழுதிவிட்டான் ..
கடவுளையும் கவி பாட விட்டாயடி !!

கடவுளும் கவிஞன்தான்
உன்னைப்படைத்ததால் !!! 

கவிதைகள்தானே


குழல் 

காணத உண்மையை கண்டேன்
ஆம்
கரு நிற பூக்களின் மணம் தேடி வந்த
பசிமயக்க பட்டாம்பூச்சிகள்
பறக்க மனமின்றி படுத்துறங்கின
உன் குழலில் ...

பொட்டு
நெற்றி வானில்
குட்டி அம்மாவாசை


புருவங்கள்
அம்புங்கள் இன்றி
எய்தும்
வில் ..

மையிட்ட கண்கள்
தண்ணீரின்றி தவிக்கும்
மோக மீன்கள் ..

மூக்கு
நான் வாழ கொடுக்கும்
ஆக்ஸ்சிஜென்
கூடம் ..
உதடுகள்
அணையாமல் ஓடும்
எரிமலை குழம்புகள் ..


பற்கள்

 நீ
சிரிக்கையில்
அணிவகுக்கும்
நட்சத்திரங்கள் ...


கடலில்
காணத சங்காய்
உன் கழுத்தும்

மகுடங்கள்
தொங்கும் மடலாய்
 உன் காதுகளும்
கவிதைகள்தானே !!!

06 ஆகஸ்ட் 2011

கலைந்த கோலம்

கலைந்த அழகான 
ஒரு கோலம் 
அவளின் குழல் ..


உருகிய எரிமலைகளுக்கிடையில் 
ஓடும் பாலாறு 
அவளின் சிரிப்பு ...